top of page
Mahalakshmi Narayanan

சிங்கையில் ஒரு காதல்! பாகம்-20


காலை கதிரவனின் தீட்சண்யமான பார்வையில் சிங்கை மக்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். வார நாளின் ஆதிக்கம் அவர்களின் உழைப்பை பன்மடங்காக்கி இருந்தது. சாராவும் , பாரியும் அதிகாலையிலேயே வேலை காரணமாக கிளம்பிவிட்டனர். வர்ணாவின் உடலும், மனமும் சோர்ந்து போயிருந்ததால் அன்று அலுவலகம் கிளம்ப மனமின்றி அமர்ந்திருந்தாள் . தாமதமாக செல்வதற்கு அனுமதி வாங்கியிருந்தாள்.


மனம் எதையாவது நினைத்து குழப்பத்தில் இருக்கும் போதுதான் சோர்வு தென்படும். அவளுடைய குழப்பத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இப்போது இருப்பது இன்னும் எத்தனை நாட்கள் சிங்கப்பூரில் இருக்கப் போகிறோம் என்பதுதான்..!கண்மூடி, திறப்பதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டன. மறைந்து போன நாட்களில் தான் அனுபவித்த எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் கண் முன்னே வந்து போயின.



இந்த ஒரு வருட சிங்கை வாழ்க்கை தனக்கு அளித்தது என்னவோ சந்தோஷத்தை தான். பெற்றோரின் பிரிவு ஒரு புறம் இருந்தாலும் அதிகமாக அவளை சந்தோஷப்படுத்தியது காதலெனும் உணர்வு.! தனக்குள் இருக்கும் காதலை உணரவே பல நாட்கள் ஆகிவிட்டன. அந்த காதலை சொல்லவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறிய நாட்கள் பாதி..இதோ இன்னும் இரு வாரங்களில். எல்லாமே முடியப்போகிறது..இனி தன் அத்தியாயத்தில் காதலுக்கு இடம் இருக்க போவதில்லையோ? இதுவரை தன் வாழ்க்கையில் இடம்பெற்ற மாந்தர்கள் மறைந்து புதிய மாந்தர்களின் துவக்கம் பெறும் புதிய அத்தியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தான் முடியுமோ.? எதை நோக்கி பயணப்பட போகிறோம் என தெரியாமலேயே நகர்த்துகிறது இந்த வாழ்வெனும் நாவல்..!

தான் மட்டும் சிங்கப்பூருக்கு வராமல் இருந்திருந்தால் இத்தனை கஷ்டங்கள் இன்றி தனக்கென எவ்வித ஆசையுமற்ற , பெற்றோரின் கடமையை கருத்தில் கொண்ட ஒரு நல்ல மகளாக வாழ்ந்து இருக்கலாமே..? பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்த அம்மாவை எதிர்த்து பேசி இருக்க வேண்டாம். அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை தான் செய்து கொண்டிருக்கும் குற்ற உணர்வு இருந்திருக்காது. அவர்களை தன்னிடம் கெஞ்சி கேட்க வைக்கும் நிலைக்கு தள்ளி இருக்க வேண்டாம்.


உண்மையில் இரு வாரங்களோடு வேலை முடிந்தாலும் அதற்கு மேலும் பத்து நாட்கள் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இருப்பதால் சாராவின் யோசனைப்படி அத்தனை நாட்களும் தங்கிவிட முடிவு செய்தாள். ஆனால் இதைப்பற்றி அம்மாவிடம் சொல்ல நினைத்தவளை நடந்த சில நிகழ்வுகள் தடுத்தன. தன்னோடு வேலைக்கு வந்த மற்ற இந்திய நண்பர்கள் இரு வாரங்களில் கிளம்புகின்றனர்.தான் மட்டும் இருப்பதற்கான காரணம் .? ஆதவன்..!


தன் காதலை எத்தனை மெனமையாக அவன் எடுத்துரைத்தான்? இன்று இருக்கும் மன தைரியம் அன்று இருந்திருந்தால்.. இன்றைய நிலை வேறு. ஆதவனிடம் எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என உறுதி கொண்டு விழிகளை மூடினாள். ஆதவனின் உருவம் நிழலாடியது.


“வர்ணா…!”திடீரென அந்த மென்மையான குரல் கேட்டு திடுக்கிட்டாள். இந்த குரல்..? இது ஆதவனின் குரலாயிற்றே. அவனால் மட்டும்தான் , கவிதையாக தன் பெயரை உச்சரிக்கமுடியும். அந்த குரலில் அப்படி ஒரு காந்த சக்தி…


சன்னலோரம் அமர்ந்திருந்தவள் படாரென எழுந்து விரைந்து வந்து சுற்றும் , முற்றும் பார்த்தாள். வீடு மெளனம் காத்தது. அவளின் விழிகள் பரபரப்பான தேடலுக்குப் பின் ஏமாற்றமடைந்தன. மனம் கலங்கி நின்றாள்.


அவனது சுறுசுறுப்பின் பிரதிபலிப்பாக வீடும் காட்சியளித்ததாலோ என்னவோ இப்போது அவனின்றி உணர்வற்று ஒளி மங்கி கிடந்தது. இந்த வீட்டில் அவனோடு, தான் கழித்த இனிமையான காலங்கள் கண் முன்னே வந்தன. அவனும் அவளும் அதிக பட்சமாக சாப்பிடும்போது தான் உரையாடுவது வழக்கம். அவனுக்காக அவள் சமைத்து வைத்திருக்கும் உணவை அவன் ருசித்து உண்ணும்போது அதை அவனறியாமல் பார்த்து சிலாகித்துப்போவாள். தனக்குத் தேவையான பொருள் ஏதேனும் வாங்கவேண்டுமானால் சாரதாவிடம் சொல்லாமல் அவனிடம் சொல்லும் அளவுக்கு உரிமை வலுவானது.


அவன் தன்னருகே இல்லாமல் வாழவே முடியாது என்ற எண்ணம் தோன்ற, எதிர் கால வாழ்வைப்பற்றிய அச்சம் உருவானது. இப்போதிருக்கும் மன நிலையில் ஆதவனின் குரலைக் கேட்டாலே போதும். சற்று ஆதரவாக இருக்கும். ஆனால் இப்போது அவன் இருக்கும் நிலையில் பேசமுடியாது. தான் தொந்தரவு செய்வதும் முறையல்ல.


ஊருக்குச்சென்றதும் பெற்றோர் காலில் விழுந்தாவது அவர்கள் சம்மதம் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்குமளவுக்கு தேறியிருந்தாள்.


ஆனால் மறு கணமே, அப்பா பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிரசாந்தின் ஞாபகம் வந்தது. அவனது நாகரீகமான அணுகுமுறையால் மனம் மேலும் குற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டது உண்மை. எத்தனை கண்ணியமான அறிமுகம்? எல்லாமே கைப்பேசி குறுஞ்செய்திதான். ஆனால் நேரில் பேசுவது போன்ற தெளிவான வார்த்தைகளை நயம்பட எழுத்து வடிவில் படித்த போது மனம் நொந்து தான் போனது.


நேற்றிரவு, அவன் அழைத்தும் கைப்பேசியை வர்ணா எடுக்காத போதும், “நான் பிரசாந்த்.! தாங்கள் விழித்திருந்தால் தங்களின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்”. என்றவன் முப்பது நிமிடங்கள் காத்திருந்தான். அதன் பிறகு தாங்கள் உறங்கி விட்டீர்கள் என எண்ணுகிறேன் அல்லது தாங்கள் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். தங்களிடம் பேச இன்றைய நாள் எனக்கு அவகாசம் தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்த பிறகு தங்களின் ஓய்வு நேரத்தில் என்னைத் தொடர்பு கொள்ளவும். தங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன். என்று சுத்த ஆங்கிலத்தில் எழுதி கூடவே தன் உணர்வுகளை காட்டும் விதமாக புன்னகை புரியும் பொம்மை முகத்தையும் போட்டு முடித்திருந்தான். எத்தனை கண்ணியம்! ஆனால் அதை ரசிக்கவோ பாராட்டவோ நிம்மதி அடையவோ மனதால் கூட முடியாதே. மனம் முழுதும் ஆதவனிடம் இருக்கிறதே..?

அதேசமயம், பிரசாந்த்தின் இத்தனை நாகரீகமான அணுகுமுறைக்கு மதிப்பளிக்கும் விதமாக, தான் பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளானாள்.

எப்படி எனத்தெரிய வில்லை. அது வரை மனம் குற்ற உணர்வில் மிதக்கும். தன் உண்மையான காதலை ஆதவனிடம் தெரிவிக்காத வரை மனம் தவிப்பில் இருக்கும். எல்லாவற்றையும் விட தன் பெற்றோரிடம் தன் காதலை வெளியிடும் வரை தன் வாழ்வு என்னவாகப் போகிறதோ என்ற பயம் சூழ்ந்து கொண்டிருக்கும். விழி நீர் கன்னத்தில் புரண்டது.


******


வனமாக தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் சந்துரு. சிந்தாமணியின் குரலை அவன் லட்சியம் செய்யவில்லை. தன் மகனருகே வந்து நின்றவளது குரல் என்றைக்கும் இல்லாமல் இன்று தடுமாறியது. “நிஜமாவே போறியாடா….”?

அவளை நிமிர்ந்து ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்தான்.


மகனின் செயலில் குழப்பமும், கவலையுமாக நின்றாள்.


என்ன ஆயிற்று இவனுக்கு ..? நேற்று அப்படி என்ன நடந்திருக்கும். இரவு திடீரென வந்து நாளை நான் மலேசியா போறேன். என்றான்.


என்னடா திடீர்னு..? போயிட்டு எப்ப வருவே..? டிக்கெட் போடனுமே..? என்ற அவளது யதார்த்தமான கேள்விகளுக்கு ஒரே பதிலில் வாயடைத்தான்.


நான் இனி இங்கே வரமாட்டேன்.


அதிர்ந்து போனாள்.


ஏன் ? என்னடா ஆச்சு.? நேற்று வரைக்கும் இதைப்பற்றி எதுவுமே சொல்லலையே.. இப்படி திடீர்னு வந்து சொல்ற..? என்ன காரணம்..?


அவளது அத்தனை கேள்விகளுக்கும் அலட்சிய பாவனையோடு தன்னறைக்குள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான்.


அதன் பிறகு அவனைத்தொந்தரவு செய்து கேட்டாலும் பலனிருக்காது. அவன் தன் கேள்விகளை அல்ட்சியப்படுத்தியது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவனது முகத்தில் ஒரு வித்தியாசத்தை கவனித்தாள். வாடிய முகம், கண்களில் சோகம் .. இதுவரை அவனை இப்படி பார்த்ததில்லை. என்னவாக இருக்கும் என்று குழம்பியவள் மறு நாள் வரை காத்திருந்தாள்.


ஆனால் இப்படி காலையிலேயே கிளம்பத்தயாரானபோது கொஞ்சம் பதற்றம் வந்தது.


“ஏதாவது பேசு சந்துரு.. மாமா உன்னை ஏதாவது திட்டினானா? இல்லை உன் அப்பா ஏதாவது சொல்லி குழப்பி உன்னை அங்கே வரச்சொன்னாரா..?”


அம்மாவின் இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாலும் எல்லாம் சரியாகிவிடப்போவதில்லை.


அவனை யோசிக்கவிடாமல் மீண்டும் கேட்டாள்.


ஏதாவது சொல்லுடா?


நான் என்ன சொல்ல..? சொல்ல நிறைய இருக்கு. ஆனா நீ கேட்க மாட்டே..


புரியாமல் நின்றாள்.


நீயும் என்னோடு மலேசியா வந்திடு.. நாம் அங்கே நிம்மதியா இருக்கலாம்.


ஸ்தம்பித்து போனாள். இதை அவள் எதிபார்க்கவில்லைதான்.


ஏன்..? இங்கே நிம்மதிக்கு என்னடா குறை..?


இங்கே நீ வாழறது நிம்மதியான வாழ்க்கையா..?

புருஷன் உன் கூட இல்லை. பெத்த பிள்ளையும் உன் கூட இல்லை. ஏதோ இப்பதான் கொஞ்ச நாளா இங்கே இருக்கேன். சொந்த வருமானம் இல்லாம உன் தம்பியையே நம்ப வேண்டிய சூழ் நிலை ….. எந்த நேரத்துலயும் தம்பி வாழ்க்கை பறிபோயிடுச்சுனா உன் நிலைமை என்ன ஆகும்ங்கிற பயம்.. இது ஒரு வாழ்க்கையா..?

அம்மாவை நேரே நோக்கினான்.


உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள்.

மகன் வித்தியாசமாக தெரிந்தான் அவளுக்கு.


என்னோடு கிளம்பி வாம்மா.


நான் வந்துட்டா உன் மாமா நிலை என்னாகும்..?

நான் இல்லாம அவன் இருந்ததில்லையேடா..?


“நீ இருக்க விட்டதில்லை.. “அந்த அறையே அதிர்ந்து எதிரொலிக்குமளவு உரக்க சொன்னான்.


சப்த நாடியும் ஒடுங்கிப்போய் நின்றாள்.


“உனக்கு பயம்.. அப்பாவால நிறைய சம்பாதிக்க முடியல…உன் பகட்டான வாழ்க்கைக்கு உன் தம்பியை பயன்படுத்தி உன் ஆசையை நிறைவேற்றிக்க பார்க்கறே..”


“சந்துரு….?! இப்போது அவளது கட்டைக் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.


“அவன் என் தம்பிடா…அவனை நான் பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்றே..?”


“நீ கோபப்பட்டாலும் அதுதான் உண்மை…”


வாயடைத்துப்போய் நின்றாள்.


“உன் தம்பி எப்படிப்பட்டவர்னு உனக்கு தெரியும். ஒரு நல்ல அக்காவா புத்திமதி சொல்லி திருத்தி இருக்கணும். அவருக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை புரிய வெச்சிருக்கணும். நீ செஞ்சியா..? அந்த கமலா மூலமா மலேசியா சொத்தை அடைய முடியலன்னு உனக்கும் ஆதங்கம்.. அதனால் நீ கொடுத்த சாவியில் உரு ஏறிப்போன பொம்மையா உன் தம்பி கமலாகிட்ட நடந்துகிட்டாரு. கடைசியில அவர் பெத்த மகளை வைத்து சொத்தை அடைய நினைக்கிற அளவுக்கு அவரை நீ மாத்தியிருக்கே..”


“ நிறுத்துடா….! இதெல்லாம் உனக்கு இப்ப தான் தெரியுதா..இதெல்லாம் தப்புனு தெரிஞ்சா உன்னை வரச் சொன்னப்போ வர முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே..?”


“உன் ரத்தம் தானே..?எப்படி சொல்வேன்..?

பத்து ரிங்கெட் கொடுத்து இதுக்குள்ள செலவு பண்ணுன்னு என்னை வளர்க்களையே..? பத்து ரிங்கெட்டுக்கு மேல உனக்கு பணம் கொடுக்க வக்கு இல்லாத அப்பான்னு சொல்லி சொல்லியே தானே என்னை வளர்த்தே..?

அப்பாவ மட்டம் தட்டுறதா நினைச்சு என்னை உன் பாதைக்குள்ள கொண்டு வந்துட்டே. சின்ன பையன் தானே நான்.. இந்த வயசுலயும் உன் தம்பியே உன் பேச்சைக் கேட்டு ஆடறபோது நான் மட்டும் எப்படி மறுத்து பேசுவேன்.?”


“அப்படி மறுத்து பேசாத நீ இப்ப ஏன் பேசற..?”

ஆதங்கத்தில் பொங்கினாள்.


நல்ல சேர்க்கை…நல்ல புத்தியை கொடுக்கும்..


“ ஓ….! இப்பதான் புரியுது. அந்த ரம்யாவை நீ மாற்றுவாய்னு பார்த்தா, நீ இப்படி மாறிப்போய் நிக்கறயேடா..அவதான் உன்னை ஆட்டி வைக்கறாளா..? அவகிட்ட பேசறதில்லைனு சொன்னே..? இந்தளவுக்கு மாறிப்போகும் அளவுக்கு உன்னை மாற்றியிருக்காளே.. அவளை நம்ம பக்கம் இழுக்கலாம்னு பார்த்தா.. உன்னை அவ பக்கம் இழுத்திடுவா போலிருக்கே..?


“நிறுத்துமா..! இது நட்பு ..உன்னால புரிஞ்சுக்க முடியாது. இன்னொரு முறை ரம்யாவைத்தப்பா பேசாதே..அவளை மாற்றி நம்ம பக்கம் இழுக்கறதுக்கு இது என்ன சினிமாவா.? உங்க திட்டம் ஜெயிக்கறதுக்கு, அவ யாரும் இல்லாத பொண்ணு இல்லை.. அவளுக்கு அண்ணன்னு ஒருத்தன் இருக்கான் தெரிஞ்சுகோ.. நான் இல்ல.. வேற எவனும் தப்பான எண்ணத்தோட அவளை நெருங்க முடியாது. “


அவனது வார்த்தைகள் பிடிக்கமல் முகத்தை வெறுப்போடு திருப்பிக்கொண்டாள்.


உன்கிட்ட இப்ப சொல்லவேண்டாம்னுதான் இருந்தேன். ஆனா சொன்னாதான் நீ ரம்யாவை தப்பா பேசமாட்டே..


என்ன சொல்லப்போகிறான் என்பது போல் பார்த்தாள். மனம் பதைத்தது.


நான் ஆனந்திங்கிற ஒரு பொண்ணை காதலிக்கிறேன். மலேசியாவில் இருக்கா. அவ ஒரு சாதாரணமான பொண்ணுதான். அவளைப்போல நான் உண்மையா இல்லை. அதனாலதான் நீ சொன்னதைக்கேட்டு, பணத்தாசையில் அவளை விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புனு இப்பதான் புரியுது.


சிந்தாமணியின் கண்கள் உக்கிரமாகின. ஏமாற்றத்தை தாங்கமுடியாமல், உஷ்ணமான மூச்சுக்காற்றால் நெஞ்சம் மேலும் கீழுமாய் அதி வேகமாக ஏறி இறங்கியது.


ஆனால் அவளது கோபத்தால் தன்னை ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது போல் அவனது பார்வை இருந்தது.


சில நொடிகள் மெளனத்துக்குப்பின் அவனே ஆரம்பித்தான்.


அம்மா…!

அவனது கனிவான அழைப்பில் மனம் அமைதியானது. அவன் அம்மா என்று அழைத்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவளும் அதற்காக ஏங்கியதில்லை. பணம் மட்டுமே முக்கியமென கருதியவளுக்கு பெற்ற பாசம் இரண்டாம்பட்சம்தான்.

வீட்டையும், மகனையும் கவனித்துக்கொள்ளத்தான் கணவர் இருக்கிறாரே என்ற அசட்டைத்தனம். இன்று அவனது அழைப்பு அவளை என்னவோ செய்தது. அந்த அழைப்பில் உதாசீனம் இல்லை. வெறுப்பு இல்லை. பற்றில்லாமல் உதிர்க்கும் வெறும் வார்த்தையுமில்லை. தன்னை உண்மையான பாசத்தோடுதான் அழைக்கிறான் என்பது அவன் விழிகள் உணர்த்தின.


தான் பெற்ற மகனின் விழிகளைக் கண்ட போது அத்தனை கோபங்களையும் தோற்கடித்து தாய்மை வென்றது. அதன் அடையாளமாய் அவளது விழிகளில் ஈரம் சுரந்தது.


என்னோடு வாம்மா..உன் தம்பி அவர் வாழ்க்கையை வாழட்டும். எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழட்டும்மா. நீ வா. நாமும் நம்ம வாழ்க்கையை வாழலாம். உனக்காக அப்பா காத்திருக்கார்.


அப்பாவைப்பற்றி இப்பதான் புரிஞ்சுகிட்டேன்.


உன் நலம் விசாரிச்ச அப்பாகிட்ட அன்றைக்கு ஒரு நாள் கேட்டேன். ஏம்பா நீ இன்னுமா அம்மாவை நினைச்சுட்டு இருக்கேன்னு..


அவர் என்ன சொன்னார் தெரியுமா..?


உன் அம்மா நினைச்சா என்னை உதறிட்டு வேறு ஒரு வாழ்க்கையை தேடியிருக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் அவளுக்கு நிறைய வந்தும் அவ அதை செய்யல .. அவள் எண்ணங்கள் தப்பா இருக்கலாம். ஆனா அவ தப்பானவ இல்லைனு சொன்னார்மா.


அந்த வார்த்தையில் ஒரு கணம் சிலையாகி உருகி நின்றாள். மகன் முன்பு கண்ணீர் சிந்தாமல் அடக்கி வைத்தாலும், கால்கள் வலு குறைந்து தடுமாறின. இந்த தடுமாற்றம் தோல்விக்கானது அல்ல. பாசத்தின் பிடியில் தான் தானும் இருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.


“பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக வாழ வேண்டியது பெற்றோரின் கடமை. அதைவிட ஒரு தப்பான உதாரணமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒருமுறை தன் கணவன் தன்னை எச்சரித்தது ஞாபகம் வந்தது.

உண்மையில் இன்று அந்த நிலையில் தான் நிற்பது குறித்து வேதனையில் சிரம் தாழ்ந்தது. அதைவிட அதை எடுத்துக் கூறி தன்னோடு வா. நம் வாழ்க்கையை வாழலாம் என்று கூறிய மகனை இது நாள் வரை சரியாக புரிந்துகொள்ளவில்லையே என்று மனம் நொந்தாள்.


இத்தனை அவப்பெயரை சுமந்து கொண்டு வீம்புக்கு தன் மகனிடம் பேசி, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்வதில் அர்த்தம் இல்லையோ என யோசித்தாள்.


ஆனால் அதைவிட வீட்டின் உள்ளே நடக்கும் உரையாடலை வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த மதன்குமார் அதிர்ச்சிபிரமையில் நின்றான்.


சந்துருவின் இத்தகைய மாற்றம் எதிர்பார்க்காதது என்று சொல்ல முடியாது. ரம்யாவின் சுத்தமான குணம், அவளது கபடமற்ற பேச்சு, வெகுளித்தன சிரிப்பு என எல்லாம் தான் அவனை மாற்றியது. அதைவிட காதலியின் கண்ணீர் உரையாடல் அவனை தோற்கடித்தது. இறுதியில் காதல் வென்றது.


அன்று ரம்யாவை சினிமா தியேட்டரில் பார்த்த பின்பு ஆதவனைப் பார்த்து பயந்தவன் தான். ரம்யாவிடம் பேசவே இல்லை ..ஒருவேளை தான் யார் என்று அவன் கண்டுபிடித்து சொல்லிவிட்டானோ என்ற உணர்வு அவளிடமிருந்து ஒதுங்கிச் செல்ல வைத்தது. அதே சமயம் ரம்யாவும், தான் அன்று பாதியில் வந்துவிட்டதால் அவன் கோபமாய் இருக்கிறானோ என்று எண்ணினாலும், தன்னை காரில் கொண்டு வந்து விடும் போது அண்ணன் கூறிய அறிவுரை யோசிக்கவைத்தது.


அந்த குழப்பத்தை நீடிக்க விடாமல் இன்னும் எளிதாக்கும் நிகழ்வாக அன்று விழாவில் மதன் குமாரிடம் ஆதவன் பேசிய அனைத்தும் சந்துரு பற்றி தான் என்பதும் தெளிவாகப் புரிந்தது.


அவனை நேரில் சந்தித்து தன் கோபத்தை கொட்ட நினைத்த வேளையில் தான் பெரியசாமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. தன் தந்தை பிழைத்து விட்ட சந்தோஷத்தில் இருந்த போதுதான் தானாகவே அவளிடம் மாட்டிக் கொண்டான் சந்துரு


பெரியசாமியின் உடல்நிலை குறித்து ஊரே அறிந்திருக்க, அதைப் பற்றி சிந்திக்காமலோ,

அல்லது தன் அம்மா, மாமா போன்று பரிகாசம் செய்து நகைத்துக்கொண்டு இருக்கவோ மனம் இடம் தரவில்லை..ரம்யாவைத் தொடர்பு கொண்டு தந்தையை விசாரிக்க எண்ணினான்.


அவனது அழைப்பு கணத்தில் அவளை உஷ்ணம் ஆக்கியது.


மறு கணமே கைபேசியை எடுத்தவள்,


“என்ன…உன் திட்டம் நிறைவேறவில்லை என்று வருத்தமா இருக்கா..? இன்னும் என்ன திட்டம் தீட்டி வச்சிருக்க…? இப்ப போன் பண்ணி பேசுறியே ..?நம்பிக்கை துரோகி….என்று ஆத்திரத்தில் கத்தினாள்.


இதுதான் நடக்கும் என்று நினைத்திருந்ததால் அதற்கு தயாராகவே இருந்தான் சந்துரு.


ரம்யா..நீ என்னைத் திட்டுவது சரிதான்.. ஆனால் நான் சொல்வதைக் கேட்டுட்டு பேசு..”


இன்னும் என்ன சொல்ல போறே..? உன் அம்மாவும் மாமாவும் இன்னும் ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்காங்களா..?


ரம்யா நடந்த எல்லாத்துக்கும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடு..


எவ்வளவு கேவலமா திட்டம் தீட்டி அன்றைக்கு தியேட்டர் வர சொன்னே..?உன்னைப் போய் நம்பினேனே..எவ்வளவு கீழ்த்தரமானவன் நீ..உன் மாமனுக்கு தப்பாம பிறந்திருக்கே. அன்றைக்கு என் அண்ணன் மட்டும் வந்திருக்கலெனா என்னடா திட்டம் தீட்டியிருந்த…? வெடித்தாள்.


ப்ளீஸ் ரம்யா அவ்வளவு மோசமானவன் நான் இல்ல.. ஏதோ என் அம்மா, மாமா பேச்சைக் கேட்டு நான் அந்த மாதிரி முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன். மற்றபடி தப்பான எந்த எண்ணமும் இல்ல ரம்யா. உன் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு.. என்னைத் தப்பா நினைச்சுடாதே ரம்யா..!


இனிமேல் உன்னை சரியாவா நினைக்க முடியும்..?நட்புக்கு களங்கம் ஏற்படுத்திய துரோகி நீ. துரோகிக்கு மன்னிப்பே கிடையாது. இன்னும் யார் யாருடைய குடும்பத்தைக் கெடுக்கிறதா திட்டம் போட்டு இருக்க..சொல்லு..நீ திடீர்னு வந்து என்னிடம் வழிய வந்து சந்திச்சு பேசுயது எல்லாத்தையும் யோசிக்கும் போது என் ஏமாளித்தனத்தை நினைச்சு என் மேலயே எனக்கு கோபம் வருது. நல்ல நண்பனா உன்னை நினைச்சேன். என் குடும்பச் சூழலில் நான் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் உன்கிட்ட போனில் பேசினால் மனசு நிம்மதியா இருக்கும்னு தோணும். அந்த சுத்தமான நட்பை களங்கப் படுத்திட்டயேடா.. உன் அம்மாவும்,மாமாவும் செய்த கேவலத்தை நீயும் செய்யத் துணிந்தவன்.. நீ .

ச் சீ என் முகத்தில் முழிச்சிடாதே ..

சட்டென போனை வைத்தாள். ஆனால் அவளது வார்த்தைகளில் கலங்கிப் போனவன் தன்னை ம்தன்முறையாக வெறுத்தான். அவளது ஒவ்வொரு கேள்வியும் அவனைத்துளைத்தெடுத்தன.ஏற்கெனவே காதலியின் கண்ணீரில் உருகிப்போயிருந்தவன் ரம்யாவின் வார்த்தைகளால், சிங்கப்பூரை விட்டே கிளம்பிவிட எண்ணினான்.

மாமா கம்பெனியில் உன்னை சேர்த்துக்க சொல்லியிருக்கேன். அப்புறம் நீ சிங்கப்பூரிலேயே நிரந்தரமா இருந்துடலாம் என்ற சிந்தாமணியின் வார்த்தைக்கு அவசியமில்லாமல் போனது.


******


நிழற்படத்தில் உயிரோட்டமாய் வியாபித்திருக்கும், அன்புச்செல்வியிடம் கை கூப்பி நிற்கிறாள் கமலா. அவள் மனவேதனைகளை விழி கலங்கி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். அவள் திரும்பிய போது பலத்த அதிர்ச்சிக்குள்ளானாள். ஏதும் யோசிக்கும் சக்தியற்று விழிகள் விரிந்த நிலையில் ஒரு சில நொடிகள் நின்றவளுக்கு, எதிரே ஒலித்த குரல் செவிகளில் விழவில்லை.


“எங்கே கிளம்புறீங்க..?”

என்று அழுத்தமாக இரண்டாவது தடவையாக கேட்டபோதுதான் சுயநினைவுக்கே வந்தாள்.

அங்கே நின்று கொண்டிருப்பது ஆதவன்தானா என்று இன்னும் நம்ப முடியவில்லை.


அவன் முகத்தில் உள்ள இறுக்கம், குரலிலும் தெரிந்தது.


தன் முன் நின்றுகொண்டிருக்கும் ஆதவனை இந்த நேரம் எதிபார்த்திருக்கவில்லை. துரை, ஏதும் கூறிவிட்டாரோ என்ற பிரமைக்குச்சென்றவள் தன்னிடம் கேள்வி கேட்டு நிற்கும் ஆதவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்பதை உணர்ந்தாள்.


அவன் அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.

உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியவள், நாங்க கிளம்பறோம் என்றாள்.


“அதான் எங்கேன்னு கேட்டேன் .? என்றான்.


அவன் தன்னிடம் சாதாரணமாக கூட பேசியதில்லை.

இன்று பேசிய விதத்தில் அவன் கோபமாக இருப்பது புரிந்ததும் என்ன பேசுவது என்று ஏதுமே தோன்றாத நிலையில் அப்படியே நின்றாள்.


ஆனால் தன்னிடம் பதித்திருக்கும் அவனது விழிகள் இன்னும் பல் கேள்விகளைச்சுமந்திருப்பது புரியாமலும் இல்லை.


நீங்க இன்னும் பதில் சொல்லலை .


சுய நினைவுக்கு வந்தவளாய் , அவனிடமிருந்து வழிகளை விலக்கி தரையில் பதித்தாள்.


தனியா போய் இருக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். அதான் நானும் , ரம்யாவும் கிளம்பறோம். மெலிந்த குரலில் கூறினாள்.


இப்ப என்ன செய்றீங்கன்னு புரிஞ்சுதான் செய்றீங்களா..?


நல்லா யோசித்து தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கேன்.


நல்லா யோசித்து இருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டீங்க…


புரியாமல் பார்த்தாள் அவனை.


நான் செய்த தவறை இப்ப நீங்க செய்றீங்க.


அவர் நலனுக்காக தான்……


அப்பா நல்லா இருக்கணும்னு நினைச்சா நீங்க எப்படி போக முடியும்..? அப்பாவை விட்டு நான் பிரிந்ததால இத்தனை காலம் தண்டனையை அனுபவிச்சார். இப்ப நீங்க போய் அந்த பிரிவை தாங்காம மறுபடியும் ஒரு தண்டனையை அனுபவிக்கணுமா..? சற்று கடுமை தெரிந்தது அவன் குரலில்.


அவனது கேள்விக்கு பதிலின்றி நின்றாள்.


நேற்று முழுதும் நீங்க அப்பாவைப் பார்க்க வரலை. அப்பா உங்க ரெண்டு பேரையும் கேட்டுக்கிட்டே இருந்தார். துரை அங்கிள் சொன்ன காரணங்கள் எதுவுமே எனக்கு நம்புற மாதிரி தெரியல.. அதனாலதான் எனக்கு சந்தேகம் வந்தது.

தன் சந்தேகம் சரிதான் என்பது போன்ற பார்வை இருந்தது அவனிடம்.


அவள் மௌனமாக தலை குனிந்தாள்.


நீங்க பிரிய நான் காரணமாயிட்டேன்பா. இத்தனை காலம் கழித்து தான் நீயே வந்திருக்கே.. மறுபடியும் உன் அப்பாவோடு நீ எப்போதும் இருக்கணும்..அதுக்கு இந்த வழியைத் தவிர வேறு வழி தெரியலை.


என் பிரிவுக்கு நீங்க காரணம்னு நான் நினைக்கல. உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. அம்மா இருக்கும் இடத்துக்கு உங்களை அழைத்து வர எப்படி அப்பாவால முடிஞ்சது என்கிற கோபம் இருந்தது. இது ஒரு மகனுடைய ஆதங்கம்.. இது உங்களுக்கு புரியாது .


அது புரிஞ்சதால தான் பா இந்த முடிவு எடுத்தேன்.


நீங்க போனாதான் நான் அப்பா கூட இருப்பேன்னு நான் சொல்லலையே.. அப்பா மேல இருக்கும் கேள்வி என் மனதில் இன்னும் அப்படியே இருக்கு. ஆனா அதைவிட அதிகமா பாசமும் இருக்குன்னு இப்பதான் எனக்கே புரிஞ்சது. நிச்சயமா அப்பாவை தண்டிக்கிறதுக்காக அவரை விட்டு போகலை என்னைப் பற்றி யோசிக்கலையோ என்கிற வேதனையில் தான் விலகி இருந்தேன். என் பிரிவு அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும்னு நான் கற்பனையிலும் நினைத்து பார்க்கல. குரல் கம்மியது


மறுபடியும் ஒரு பிரிவை நீங்க கொடுத்திடாதீங்க..என்ற போது அவள் விழிகள் கலங்கி கண்ணீர் வழிந்தன.


ஆதவனை நேராக நோக்கியவள், நிச்சயமா எங்க மேல உனக்கு கோபம் இல்லையாப்பா என்றாள். பரிதாபமாக அவள் கேட்ட கேள்விக்கு அவன் மௌனித்தான்.


அங்கே சுடர் வீசிக்கொண்டிருக்கும் தன் அம்மாவின் உருவப்படத்தை பார்த்தான். விழி நீர் சுரந்தது.


அம்மாவின் கருணை விழிகள் அவனுக்கு ஏதோ உணர்த்த, தன் பார்வையை விலக்காமல் , இவ்விதம் சொன்னான்.


“கோபம் இல்லை…ஆனா வருத்தம் இல்லைனு சொல்ல மாட்டேன். அந்த வருத்தத்தை சொல்ல கூட எனக்கு யாரும் இல்லை. இதோ இதே இடத்தில் அம்மா முன்பு நான் கண்ணீர் விடாத நாளே இல்லை. தேங்கி நின்ற கண்ணீரை வெளியேற்றாமல் கட்டுப்படுத்தினான்.


அவனது வார்த்தைகள் அவளை உறுத்தின.


ஆனால் அவன் அதைப்பற்றி இனி பேச விருப்பமில்லாதவனாக நீண்டதொரு மூச்சை வெளியிட்டு கண்ணீருக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்தான்.


ரம்யா, அப்பாவுக்கு பொண்ணுன்னா என் தங்கச்சி. ஆனா உங்களை என் அம்மாவா பார்க்க முடியாது. நிச்சயமா உங்களால புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன். சன்னமான குரலில் கூறினான்.


நீங்க என் அம்மா இருக்கும் இடத்திலிருந்து என் அப்பா வளர்ச்சிக்கு பெருமளவு ஆதரவா இருந்திருக்கீங்க..அப்பா நோயில் படுத்திருந்த போதும் நீங்க தனியா இருந்து கம்பெனியை நடத்தி அப்பா கௌரவத்தை காப்பாற்றி இருக்கீங்க. அந்த கம்பெனியை விற்க போறேன்னு அப்பா சொன்னபோது அதை தடுக்க நீங்க அவ்வளவு போராடி இருக்கீங்க..மொத்தத்தில் அப்பாவை எந்த இடத்திலேயும் தலைகுனிய விடாத உங்களை எண்ணி என் அம்மா ஆத்மா சந்தோஷப்பட்டிருக்கும்னு என்னால நிச்சயமா சொல்ல முடியும்..என்றபோது விழி நீர் உடைந்து பெருக்கெடுக்க சட்டெனக் குலுங்கினாள் கமலா .


அவன் மேலும் தொடர்ந்தான்.


ஆனால் என் மனதில் ஏற்பட்ட காயம் ஆறணும். நிச்சயமா ஒரு நாள் ஆறும்னு நினைக்கிறேன். உங்க மேல உள்ள வருத்தம் குறைய எனக்கு அவகாசம் தேவை. ஆனா அதுக்காக விலகி இருக்கணும்னு அவசியம் இல்லை.இன்னொரு முறை அப்பாவை விட்டு யாரும் பிரிய வேண்டாம்..


அவனது அமைதியான பேச்சில் மனநிம்மதி அடைந்தாள்.


தன்னை இவ்வளவு புரிந்து வைத்திருக்கும் அவனை தான் பெற்ற மகனாகவே கருதினாள். இத்தனை காலம், தான் பட்ட துயரத்தை ஒருவர் சரியாக புரிந்து கொள்வதைக்காட்டிலும் தக்க சன்மானம் வேறு இருக்கமுடியாது. எதையுமே எதிர்பார்க்காமல் கடமையை மட்டுமே பாவித்து செய்த அவளுக்கு அதற்கான பலன் இன்று கிடைத்தது. அவளது அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. மனம் நிம்மதி அடைந்தது.


அவனருகே முன்னேறிச் சென்றாள். ,

ஆதவா…!என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிப்பா என்று கை கூப்பினாள்.


அம்மா ஸ்தானத்தை நீ தரணும்னு… நானும் என்றைக்குமே எதிர்பார்க்கல..அதை யாராலும் கொடுக்க முடியாது. நீ என்னை அம்மாவா ஏத்துக்கலைனாலும் என்னுடைய மூத்த மகன் நீ தான்பா..உன்னைப்பெற்ற அம்மா நான் இல்லை என்றாலும் உன் வாழ்க்கை மீது, உன் நலன் மீது அக்கறை கொண்ட ஒரு நலம் விரும்பியா என் உயிர் இருக்கும் வரை உன்னோடு இருப்பேன்..கண்ணீர் மல்க கூறிய போது அவனது விழிகளும் கலங்கின.


பல காலமாக நடந்த போராட்டம் இன்று முடிவுற்று மனம் அமைதி பெற்றது.

நடந்த உரையாடலை அதுவரை கண்ணீரோடு கேட்டுக் கொண்டிருந்த ரம்யா ஓடி வந்து அண்ணனைக் கட்டிக் கொண்டாள். இத்தனை காலம் சகோதரப் பாசத்துக்காக ஏங்கிக் காத்திருந்த அவளைத் தானும் அன்போடு அணைத்தபோது, தான் அண்ணன் என்பதை தீர்க்கமாக உணர்ந்தான்.

அவர்களின் பாசத்தைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் சிந்தினாள் கமலா. அன்புச்செல்வியின் ஆசிகள் கிடைத்துவிட்டதை பரிபூரணமாக அவள் உணர்ந்தாள்.



மலரும்

28 views0 comments

Comments


bottom of page